புதன், 26 செப்டம்பர், 2012

தெய்வ பக்தி ஏற்பட…

தெய்வ பக்தி ஏற்பட…:
"சிந்தனை செய் மனமே’ என்று ஒரு சொற்றொடருக்கு, ஏற்ப மனிதன் சதா காலமும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த சிந்தனையிலிருந்து எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை நிறைவேற்ற, உறுப்புகள் அனைத்தும் உதவுகின்றன.
இந்த சிந்தனைகளும், எண்ணங்களும் நல்லவையாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவை தீயவைகளாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் துன்பம் தான். நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் நிறைய பண வசதி இருக்கிறது. அவரது எண்ணமெல்லாம், "இவ்வளவு செல்வம் இருக்கிறதே… இவற்றை நல்ல வழியில் செலவிட வேண்டுமே’ என்று எண்ணுவார். என்ன செய்யலாம் என்று சிந்திப்பார். நம்மிடம் உள்ள செல்வம், பிறருக்கு பயன்பட வேண்டும் என்று எண்ணி, ஒரு கோவிலோ, மருத்துவமனையோ, ஒரு கல்விக் கூடமோ ஏற்படுத்துவார். பணத்தை அதற்காக செலவிடுவார்.
அவரது செல்வம் நல்ல வழியில் செலவாகிறது என்று திருப்தியடைவார். மற்றும் சிலர், தம்மிடமுள்ள பணத்தை சூதாட்டம், பிராந்திக் கடை என்று பலவிதத்தில் செலவு செய்வது உண்டு. அது, அவரவர்களின் எண்ணத்தை பொறுத்தது.
ஆனால், நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய வேண்டும். இப்படி செய்ய, நல்ல பழக்கம் வேண்டும். நல்ல பழக்கம் எப்படி ஏற்படும்? நல்லவர்களோடு பழக வேண்டும், மகான்களை அண்டி, அவர்களது உபதேசம் பெற வேண்டும். தர்ம சாஸ்திரங்களை அறிய வேண்டும். அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.
மற்றவர்கள் என்ன சொல்வரோ என்று எண்ண வேண்டியதில்லை. நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து வந்தாலே போதும்.
தவறு செய்பவன் தான், பிறரைக் கண்டு சங்கோஜப்படுவான்; பயப்படுவான். நல்லவனுக்கு எந்த பயமும் இல்லை; எதற்கும் சங்கோஜப்பட வேண்டிஇராது.
அதனால், பெரியோர்களையும், மகான்களையும், தரிசித்து, அவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம், நல்ல புத்தி ஏற்படும். வாழ்க்கையில் இது தானே முக்கியம். அதனால், நல்ல விஷயங்களை பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.
நல்ல விஷயம் என்பதில் முக்கியமானது தெய்வ பக்தி. அந்த தெய்வ பக்தி இருந்தால், மனமும் தெளிவடையும். ஒவ்வொரு நாளிலும் சிறிது நேரமாவது தெய்வத்தை நினைக்க வேண்டும்.

Filed under: ஆன்மீகம்

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மூன்று தேவியர் தீப மந்திரம்

மூன்று தேவியர் தீப மந்திரம்:
மூன்று தேவியர் தீப மந்திரம்







தீபச்சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளிப்படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே தீப தரிசனம் செய்வதன் மூலம் மூன்று தேவியர்களின் அருளையும் பெற்று கல்வி, செல்வம், வீரத்தில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.



ஓம் அஸதோ மா ஸத் கமய

தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய

ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி



ஓ தீன பந்து, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, என்னை அசத்யத்திலிருந்து என்னை சத்யத்திற்கு அழைத்துச் செல், அஞ்ஞான இருளிலிருந்து ஒளிக்கு அழித்துச் செல், ஜனன மரணம் என்னும் இந்த சம்சார சாகரத்திலிருந்து மோட்சத்திற்கு அழைத்துச் செல் என்ற உபநிஷத வாக்கியப்படி அஞ்ஞான இருளில் இருந்து ஞானஒளிக்கு அழைத்து செல்வதை விளக்குகின்றன தீபங்கள்.

வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!

வாழ்வில் வெற்றிபெற தியானம் செய்!!:
அனைவரும் வாழ்வில் வெற்றிபெற பலவகையில்  முயற்சி  செய்து கொண்டு  தான் இருக்கின்றோம். அவ்வாறு நாம் வெற்றிப்பெற  தியானம்  நமக்கு பெரிதும் துணைப் புரிகின்றது. தியானம் எவ்வாறு செய்வது என பார்ப்போம்.

எப்படி தியானம் செய்வது?

முக்கியமாக மூன்று விஷயங்களில் கவனமாக இருந்தால் நாம் செய்யும் தியானமானது நிச்சயம் எளிதில் கைகூடும். இதிலும் நமது பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும்.

01.தியானம் செய்ய நமக்கு தேவையானது உடலிலும், உள்ளத்திலும் தூய்மையான  எண்ணம் இருக்க வேண்டும்.

02.தியானமானது எளிதில் கிடைக்ககூடிய விஷயமில்லை எனவே பொறுமை மிகவும் அவசியம், அதனை எக்காரணம் கொண்டும் இழக்க கூடாது.

03.தியானத்தை ஒருபோதும் சோம்பலின் காரணமாக கைவிடுதல் கூடாது. விடாமுயற்சியுடன் தொடரவேண்டும். நல்ல காலத்திலும், கெட்ட காலத்திலும்,உடல் நலமாக இருக்கும் போதும்,உடல் நலமில்லாத போதும் தியானத்தை மட்டும் தவறவிடக்கூடாது.

04.நாம் தியானம் செய்ய மிகச் சிறந்த காலம், பகலும், இரவும் ஒன்றுகூடும் அந்திவேளை. இந்த வேளையில்தான்  நமது உடலின் அலைகள்  அமைதியாகவும்  ஆழமாகவும் இருக்கும். எனவே இவ்வேளையில் தியானம் செய்வது முழுமையாக நமக்கு உதவும்.

05.தியானம் செய்ய ஒரு பாய் மற்றும் சுத்தமான ஒரு துணி ஆகியவற்றை சுத்தமான தரையில் விரித்து அதன் மீது அமர்ந்து கொண்டு தியானம் செய்யவேண்டும். நிமிர்ந்து முதுகினை சாய்க்காமல் மற்றும் எதன் மீதும் சாயாமல் தியானிப்பது சிறந்தது.

06.தியானம் செய்யும் போது தலையும், தோள்களும், இடுப்பும் நேர்க் கோட்டில்  இருக்குமாறு நிமிர்ந்து உட்கார வேண்டும்.அதே சமயம் முதுகெலும்பைத் தளர்ந்த நிலையிலே வைத்திருக்க வேண்டும். எந்த பொழுதும் முதுகெலும்பின் மீது தேவையில்லாத பாரத்தினையும், அழுத்தத்தினையும் தரக்கூடாது.

07.நம்மை நாம் முழுமையாக உணர்தல் வேண்டும்.நமது கால் விரல்களில் இருந்து தொடங்கி,உடலில் உள்ள ஒவ்வொரு பகுதியும் முழுமையாக உள்ளதாக நினையுங்கள். இவ்வாறு ஒவ்வொரு பகுதியும் முழுமையானதாகவும்,எந்த குறையும் இல்லாததாகவும் நினைத்து தலை பகுதி வரை மேலேற வேண்டும். பின்பு முழு உடலும் முழுமையாக உள்ளதாக நினைத்துக் கொள்ளவேண்டும்.

08. இவ்வாறு செய்து முடித்த பிறகு இரு நாசிகள் (மூக்கின் துவாரம்) வழியாக மூச்சை நீளமாக உள்ளிழுத்து பின் அதை வெளியே விடவேண்டும். மூச்சு வெளியேறியவுடன் உடல்தாங்கும் வரை மூச்சை உள்ளிழுக்காமல் வெளியே நிறுத்தி வைக்கவேண்டும். இவ்வாறு நான்கு முறை மூச்சு பயிற்சி செய்யவேண்டும்.

09.இதன் பின் மனதுக்கு அமைதி தரும் பிரார்த்தனை செய்யவேண்டும். இந்த 'மகா உலகத்தை படைத்த பரம்பொருளின் மகிமையினை எண்ணிக்கொண்டு அந்த பரம்பொருள் என்னை ஒளிரச் செய்வார்' என பலமுறை கூறியப்படியே பதினைந்து நிமிடங்கள் தியானிக்கவேண்டும்.

10. நமது மனதினை நம்முன் விரிந்து கிடக்கும் அமைதியான ஒரு நீர்ப் பரப்பாகவும், வந்துபோகும் எண்ணங்கள் அதில் தோன்றும்  நீர்க்குமிழியாகவும்  கற்பனை செய்துக்கொள்ளவேண்டும். எப்பொழுதும் எண்ணங்களை அடக்கிக்கொள்ள கூடாது. அவை தானாகவே எழும்பி அடங்கக்கூடியது.

இறுதியாக 'நான் மனம் அல்ல, நான் சிந்திப்பதை நானே உணர்கிறேன். என்மனம் செயல்படுவதைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்' என்ற உயர்ந்த கருத்தினை நாம் பற்றிக்கொண்டால் இறுதியில் மனம்வேறு, நாம் வேறு என்பதை உணரமுடியும்.

இந்த நிலையினை நாம் அடைந்துவிட்டால், மனமானது நம்முடைய  வசம் வந்துவிடும்.  இந்த நிலையினை நாம் எட்டிவிட்டால் நாம் விரும்பும் எதனையும் நம் வசமாக்கிகொள்ளலாம்.

இதன் மூலம் நாம் விரும்பும் அனைத்தையும் வெற்றிக் கொள்ளலாம். வெற்றியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் நல்ல சிந்தனையையும்  இந்த உலகிற்கு தரமுடியும்.

அனைவரும் தியானத்தை சிறுபொழுது என்றாலும் விடாமல் செய்து வாழ்வில் வெற்றிபெற வேண்டுகின்றேன்.
மூலம் & நன்றி : http://arivu-kadal.blogspot.in/2012/07/blog-post_20.html