அன்னா ஹஸாரேவை யாரெல்லாம் திட்டி தீர்க்க தயாராக இருக்கிறார்களோ - அவர்கள் எடுக்கும் வாந்தியை - அப்படியே அள்ள தயாராக இருக்கிறார்கள் சிலர். அந்த பட்டியலில் பகுத்தறிவு ஏடு விடுதலையும் உள்ளது போலும். "ஊழலை எதிர்க்கவும் மாட்டோம். ஊழல் எதிர்ப்பாளர்களையும் எதிர்க்க விட மாட்டோம்" என்பது தான் அவர்களின் சீரிய கொள்கை. ஸ்பெக்டரம் ஊழல் முறைகேடு புரிந்தவர்கள், நில அபகரிப்பு வேலை செய்தவர்களின் பங்காளிகளிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
அய்யா கி.வீரமணியின் விடுதலை ஏட்டிற்கு நாளும் ஒருவர் அன்னா ஹஸாரேவை விமர்சிக்கும் செய்தியை வெளியீட்டாக வேண்டும். இல்லையென்றால் தூக்கம் வராது. அந்த வகையில் - அன்று யாரும் அன்னா ஹஸாரேயை திட்டவில்லை போலும். ஆனாலும் விடுமா விடுதலை ஏடு. தேடி பிடித்து கவர்ச்சி புயல், கலைஞரின் மானாட மயிலாட புகழ் நமீதாவின் பேச்சை படம் பிடித்து போட்டு புண்ணியம் தேடி கொண்டது.
பெரும்பாலும் விடுதலை ஏட்டின் எந்த செய்திக்கும் கருத்துரை வராது. ஆனால் நமீதா பேச்சு என்றதும் இரண்டு கருத்துரை. இதை தான் விரும்பினார்கள் போலும். திராவிட கழகத்தின் குட்டியும், இந்தி எதிர்ப்பு பீரங்கியுமான திராவிட முன்னேற்ற கழகம் - இந்தி குஷ்பூவை வைத்து திராவிடத்தையும், தமிழையும் வளர்க்க அரும்பாடுபட்டு பதினாறடி பாயும் போது, தாய் கழகமான திராவிட கழகம் எட்டடியாவது பாய்ந்தால் தானே மரியாதையாக, பெருமையாக இருக்கும்.
அந்த வகையில் கருஞ்சட்டைகளின் ஏடு விடுதலை - அன்னா ஹசாரேவை பற்றி கருத்து தெரிவிக்க இந்தி நமீதாவை குஜராத்திலிருந்து அழைத்துள்ளது. அய்யா பெரியார் சொன்னார். "தமிழகத்தை பிடித்த தரித்திரத்தில் சினிமாவும் ஒன்று" என்று. ஆனால் அதெல்லாம் பேச்சளவில் தான். கழகங்கள் சாவகாசமாக அதை மறந்து விடும். புத்திமதி அடுத்த கட்சிக்காரர்களுக்கு தான். திராவிட கழகங்களுக்கு அல்ல.பகுத்தறிவுகளின் உலகளாவிய சிந்தனைகளை வெளிப்படுத்த - கோலிவுட், பாலிவுட் நட்சத்திரங்களை விட ஹாலிவுட் நட்சத்திரங்கள் தானே சரியாக இருக்கும்.
அவ்வப்போது திரைக்கலைஞர்களை காக்கா பிடிப்பதற்கு, தேர்தல் நேரத்தில் பயன் படுத்தி கொள்வதற்கு - திராவிட கழகங்கள் என்றும் தவறியதோ, தயங்கியதோ இல்லை. இப்போதைக்கு அவர்கள் கண்களுக்கு "விஜய்காந்த்" மட்டுமே சினிமாகாரர். "அன்னா ஹஸாரேக்கு ஊழல் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது" என்று கேட்டார்கள் கருஞ்சட்டையாளர்கள். அவர்களிடம் மக்கள் திருப்பி கேட்கிறார்கள். "அன்னா ஹஸாரேயை பற்றி பேச நமீதாவுக்கு என்ன தகுதி இருக்கிறது. வேறு ஆளே கிடைக்கவில்லையா" என்று. அதில் நியாயமிருக்கிறது தானே.
எந்த சினிமா கலைஞர்களாவது - பொது பிரச்சனைக்கு வாய் திறந்தாலும் "என்ன தகுதி உள்ளது அவர்களுக்கு" என்று கேட்க தயங்குவதே இல்லை பகுத்தறிவு. நமீதாவுக்கு மட்டும் என்ன தகுதி இருக்கிறது என்று யோசித்தார்களா? "மாமன்ஸ், மச்சான்ஸ்" என்று நமீதா கெஞ்சலுடன் பேசுவதில் ஈர்க்கப் பட்டுவிட்டார்களோ என்னவோ. நமீதா பேசிய பேச்சை பார்ப்போம். "அன்னாஹசாரேவின் போராட்டத்தால் எந்தப் பலனும் இல்லை "என்று பெரிய தீர்க்கதர்சி போல கண்டு பிடித்து சொன்னதை தான் விடுதலை ஏடு பெருமையாக பிரசுரித்து உள்ளது... மேலும் நமீதா சொல்கிறார்.."
ஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. " இப்படியே சொல்லி கொண்டிருந்தால் ஊழல் பூனைக்கு மணி கட்டுவது யாரம்மா?
மேலும் சொல்கிறார். "அன்னா ஹசாரேவின் போராட்டம் பரபரப்பு செய்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது." என்று. அன்னா ஹஸாரே என்ன சினிமா நடிகையா இல்லை சாமியாரா இல்லை அரசியல்வாதியா? பரபரப்பு செய்திக்கும், கிளுகிளுப்பு செய்திக்கும் அடி போட... அப்படி பார்த்தால் - நாளும் ஒரு போராட்டம் நடத்தும் பகுத்தறிவாளர்கள் பரபரப்புக்கு தான் போராட்டம் நடத்துகிறார்களா.
அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர்களை பார்த்து பகுத்தறிவு இப்படி கேள்வி கேட்கிறது. "ஊதியமாக கருப்பு பாதி, வெளுப்பு பாதி என்று வாங்குபவர்கள் தான் ஊழல் எதிர்ப்பாளர்களா" என்று. பொதுமக்கள் நமீதா போன்ற நடிகைகளை பார்த்து - உண்மையான பகுத்தறிவுடன் இப்படி கேட்கிறார்கள் "கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி என்று ஊதியம் வாங்கும் நட்சத்திரங்கள் அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை விமர்சிப்பதில் ஆச்சர்யம் ஏதும் இல்லையே" என்று.
கருப்பில் பாதி, வெளுப்பில் பாதி வாங்கும் நட்சத்திரங்களுக்கு அன்னா ஹஸாரே பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமில்லை. பகுத்தறிவுக்கும் பிடிக்காமல் போனதில் தான் ஆச்சரியம். ஊழல் எதிர்ப்புக்கும் ஆயிரம் உள் நோக்கம், வெளி நோக்கம் கற்பிப்பவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
தமக்கு பிடிக்காதவர்களை விமர்சிக்க - யாரிடம் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கருத்துக்களை வாங்கி போடுவார்கள் போலும். மற்றவர்களின் தகுதி பற்றி பேசுபவர்கள் - எப்போதும் தங்களின் தகுதி பற்றி மறந்து தான் போகிறார்கள்.ஊழலை ஒழிக்க "முடியாது, கஷ்டம், ஆகாது" என்று சொன்னால் அது பகுத்தறிவா? ஆயிரக்கணக்கான வருஷங்களாக இருக்கும் சாதியையே ஒழிக்க முடியும் என்று நம்பும் போது, அரசியல்வியாதிகளின் ஊழலை ஒழிப்பதா கஷ்டம். சிந்திக்க வேண்டாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக